சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மகேஸ்வரி ஐபிஎஸ், நடிகை சுஹாசினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சுஹாசினி, “8 வருடங்கள் முன்பு முக்கியமான ஒரு ப்ராஜெக்ட்டில் பணியாற்றி இருந்தோம். தினமும் ஒரு மேக்கிங் இருக்கும். செட்டுக்கு போனவுடனே பிசியாக அனைவரையும் வேலை வாங்கிக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு 55 வயது இருக்கும். தினமும் காலையில் என் ஃபோனுக்கு மோசமான ஒரு புகைப்படம் வரும். அதைப் பார்த்தவுடன் கை கால்கள் எல்லாம் நடுங்கும். இது ஒருநாள் அல்ல தொடர்ந்து மூன்று மாதம் நடந்தது. அப்போது கமிஷ்னரிடம் இது குறித்து சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டார். உடனே ஏன் சொல்லவில்லை என்று கேட்டார். வெளியில் சொல்வதற்கு எனக்கே பயமாக இருந்தது. ஆனால் 18 வயது உள்ள பெண்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு நடந்து அதை வெளியில் சொல்லியிருந்தால் அந்த பெண்ணை தான் முதலில் கேள்வி கேட்பார்கள்.
அண்மையில் என் கணவருக்கு மின் கட்டணம் கட்ட சொல்லி குறுஞ்செய்தி வந்தது. நல்ல வேளை அவர் எந்த லிங்க்கையும் தொடவில்லை. பின்பு வீடு, கெஸ்ட் ஹவுஸ் என எல்லா இடத்துக்கும் சரியாக மின் கட்டணம் கட்டியுள்ளதா என சரி பார்த்தோம். எல்லாமே கரெக்ட்டாக கட்டியிருந்தது. அதற்கு பிறகு தான் அது ஏமாற்று வேலை என்று தெரிந்தது. இல்லையென்றால் மணிரத்னத்தையும் ஏமாற்றியிருப்பார்கள். அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.