இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான சசிகுமார், “அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். பருத்தி வீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என அமீருக்கு ஆதரவாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, ஞானவேல் ராஜாவிற்கு எதிராக, “கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க... என்னால் தயாரிக்க முடியாது. பணம் இல்ல அப்படின்னு சகோதரர் சூர்யா வந்து ‘படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா’ அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.. அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம். ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க... உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்.? சொல்லுங்க..! அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும் என்ன வேணாலும் பேசியிருக்கலாம். ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதைத் தான் என்னால இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல...” என குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இப்படி திரை பிரபலங்கள் இந்த விவகாரம் தொடர்பாக அவர்களது கருத்தை வெளியிட்டு வரும் சூழலில் இயக்குநர் சுதா கொங்கரா, திடீரென்று அமீர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர் என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு, “பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்...
நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாபாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாபாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குநருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி” ஆகும். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து…— Sudha Kongara (@Sudha_Kongara) November 26, 2023