
இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் வர்மா படத்தை பாலா இயக்கி வருகிறார். நேபாளத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி முடிந்த நிலையில், தெலுங்கில் வெற்றிபெற்ற `அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்கான இப்படத்தின் நாயகி தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வர்மா படத்தில் நாயகியாக நடிக்க `சில்லுனு ஒரு காதல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் `அர்ஜுன் ரெட்டி' படத்தில் நடித்த ஷாலினி பாண்டேவே தமிழ் ரீமேக்கிலும் நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் கவுதமியின் மகள் சுப்புலட்சுமி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.