![strike](http://image.nakkheeran.in/cdn/farfuture/4necsZdQO09adeyymstZBnCPSanaG7yawEeNjXPMIRY/1533347622/sites/default/files/inline-images/C30FxJ2UoAA0Sak.jpg)
தென் இந்தியா முழுவழுதும் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பட உலகில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்காக அந்த அமைப்புகள் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அதை கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும் தற்போது அறிவித்து உள்ளனர். இதனால் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம், அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம், விஷால் நடிக்கும் சண்டகோழி-2, தனுஷ் நடிக்கும் வடசென்னை, மாரி-2, விஜய் சேதுபதி படம், சிம்புவின் செக்க சிவந்த வானம், சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் ரத்து ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளதனால் திரையுலகம் முடங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தப்படுவதால் தீபாவளிக்கு அவற்றை கொண்டு வர முடியுமா என்று படக்குழுவினர் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.