சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 3டியில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஆரம்பித்து பல்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்திய படக்குழு கடைசியாக கேரளாவில் நடத்தியது. இதையடுத்து சென்னையில் படத்தின் 3டி ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலி கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அப்போது சூர்யா குறித்து அவர் பேசுகையில், “நான் பான் இந்தியா ட்ரெண்டை உருவாக்கியதாக இங்கு சொன்னார்கள். ஆனால் வெளிப்படையாக சொல்கிறேன். தெலுங்கு சினிமாவை ஆந்திரா மற்றும் அதையும் தாண்டி நான் கொண்டு செல்ல அதற்கு முக்கிய காரணம் சூர்யாதான். கஜினி படத்தின் போது சூர்யா இங்கு வந்து விளம்பரப்படுத்தினார். தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடமும் சூர்யா தெலுங்கு ரசிகர்களுடன் வளர்ந்த விதம் ஒரு படிப்பினை என சொல்வேன். அது தான் மற்ற இடங்களுக்கு படத்தை கொண்டு செல்ல எனக்கு தூண்டியது. அதனால்தான் தமிழ் ரசிகர்களிடம் அன்பை பெற முயன்றோம்.
சூர்யா தான் பான் இந்தியா மார்க்கெட்டுக்கு என்னுடைய இன்ஸ்பிரேஷன். நானும் அவரும் இணைந்து ஒரு படம் பண்ண வேண்டியிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. சூர்யா என்னுடன் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்டதாக சொல்வார். ஆனால் நான்தான் அவருடன் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்டேன். அதற்காக நான் வருந்துகிறேன். அவருடைய நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளின் விதத்தை நான் மதிக்கிறேன்” என்றார்.