தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டிய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சில தினங்களுக்கு அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியுடன் யாரும் நடிக்கக் கூடாது என்று தடை விதித்தது. இதையடுத்து நடிகை ஸ்ரீரெட்டி டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தெலுங்கு திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு மகளிர் அமைப்புகளும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தெலுங்கானா அரசுக்கும், மத்திய செய்தி ஒளிபரப்பு துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நடிகை ஸ்ரீரெட்டி நடிக்க விதித்திருந்த தடையை தெலுங்கு நடிகர் சங்கம் திடீரென்று நேற்று நீக்கியது. மேலும் இந்த 'ஸ்ரீலீக்ஸ்' விவகாரம் தெலுங்கு சினிமாவில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில் தற்போது மகளிர் அமைப்புகள் ஸ்ரீரெட்டிக்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளன. ஸ்ரீரெட்டி மற்றும் அவரை ஆதரிக்கும் நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, சுருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டு கதறி அழுது பேசுகையில்...."தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள். நடிகர் பவன் கல்யாண் அமராவதியில் இருநூறு கோடியில் வீடு கட்டுகிறார். நடிகைகள் கஷ்டங்களை அவர் கண்டுகொள்வது இல்லை. கோனா வெங்கட், அப்பாராவ் உள்பட பலர் பெண்கள் கற்பை சூறையாடுகிறார்கள். புதிய படங்களில் வாய்ப்பு கேட்கும் ஆண்களிடம் பணம் கேட்கிறார்கள். பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள். 80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும்" என்றனர்.