'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித் திருக்கிறார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பேசுகையில், “அருவி படத்தின் கதையை கேட்கும் போது திரையில் சிறப்பாக கொண்டு வரமுடியும் என்று நம்பிக்கை எப்படி வந்ததோ அதே நம்பிக்கை ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது வந்தது. இப்படத்தை பட்ஜெட் படமாக எடுப்பதை விட நிறைய செலவு செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீயிடம் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக நீங்களே எடுங்கள் என்று கூறினார்.
மாயா படத்தில் இருந்தே ஒவ்வொரு கதையையும் ஷர்வானந்துக்கு அனுப்பி கொண்டே இருப்பேன். ஆனால், இந்த கதையை கேட்டு உடனே ஒப்புக் கொண்டார். அமலா மேடமிடம் இந்த கதையைக் கூறுவதற்கு தயக்கம் இருந்தது. இருந்தாலும், இந்த படத்தில் நடிப்பது பற்றி அவரே முடிவெடுக்கட்டும் என்று நினைத்தோம். அவர் வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஸ்ரீ ஒவ்வொரு காட்சிக்கும் மிகவும் மெனக்கெடுவார். தொழிற்துறையில் காலகட்டத்திற்கு ஏற்ப அதை புரிந்து கொண்டு அந்த துறையை மேம்படுத்தக் கூடியவர்கள் ஒரு சிலர் தான். அப்படி ஒருவர் தான் ஸ்ரீ கார்த்திக். படம் மட்டுமல்ல, பாடல்களுக்கும் உடன் இருந்து பணியாற்றினார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற நடுக்கம் இருக்கும். ஆனால், இப்படத்தில் அது இல்லை.
டைம் ட்ராவல் மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்களும் ஒன்றாக பயணிக்கும் போது திருப்தியாக இருக்கும். நிறைய காட்சிகள் இல்லையென்றாலும், கதைக்கு முக்கியத்துவம் இருந்ததால் சரியாக புரிந்து கொண்டு நடித்து கொடுத்த ரீத்து வர்மாவிற்கு நன்றி” எனக் கூறினார்.