அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியான பின்பு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிலிருந்து ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியானது. உலகம் முழுவதும் வெளியான இப்படம் மார்வெல் யுனிவர்ஸின் 23வது படம் ஆகும். இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 1.1 பில்லியன் டலர்களை வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 375 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.
சோனி நிறுவனம் தயாரித்துள்ள படங்களில் அதிக வசூலை குவித்துள்ள பெருமையை இந்த படம் பெற்றிருக்கிறது. இதனால் மீண்டும் இப்படத்தை ரிலீஸ் செய்யப்போவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் வசூலை 400 மில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் 2870 கோடி) உயர்த்த சோனி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காக நான்கு நிமிட காட்சியை இப்படத்தில் சேர்த்துள்ளதாம்.
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட திரையரங்கங்களில் ‘ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகிறது.
என்னதான் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அதன் உரிமையை சோனி நிறுவனம்தான் வைத்திருக்கிறது. ஸ்பைடர் மேன் படத்தை மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இணைக்க 2015ஆம் ஆண்டு டிஸ்னியும் சோனியும் இணைந்து ஒரு ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் ஸ்பைடர் மேன் படத்தை உருவாக்கும்போது இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க செலவு செய்யும் என்றும், படம் எடுத்த வசூலை டீலின்படி பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். தற்போதுவரை வெளியான ஸ்பைடர் மேன் இரண்டாம் பாகம் வரை இந்த டீல் சரியாக நடந்துள்ளது. ஆனால், இதனை தொடர்ந்து வரப்போகும் ஸ்பைடர் மேன் படத்தில் வசூலை பிரித்துக்கொள்வதில் முடிவு கிடைக்கவில்லை என்பதால் 2015ல் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஸ்பைடர்மேன் இனி மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் படங்களில் இந்த கதாபாத்திரம் இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ரசிகர்கள், இதை வன்மையாக கண்டித்தனர். இதுவரை வெளியான ஸ்பைடர்மேன்களிலேயே டாம் ஹாலந்து நடித்திருக்கும் அதுவும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருப்பதுதான் நன்றாக இருக்கிறது அதனால் இதை தொடர வெண்டும் என்று குறிப்பிட்டு #SaveSpiderman என்ற ஹேஸ்டேகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர் மார்வெல் ரசிகர்கள்.
இந்நிலையில் டிஸ்னி நிறுவனத்தின் டி23 என்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,‘நான் ஸ்பைடர்மேனாக நடிக்க தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம் தொடர்ந்து ஸ்பைடர்மேனாக நான் நடிக்கப்போகிறேன் என்பது மட்டும்தான். ஸ்பைடர்மேன் படங்களின் எதிர்காலம் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் அற்புதமாகவும் இருக்கும். அந்த கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக வடிவமைக்க புதிய வழிகளை கண்டறிவோம்’ என்று கூறினார்.