இந்தாண்டு தீபாவளி வருகிற 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதை முன்னிட்டு கார்த்தியின் ‘ஜப்பான்’, ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ உள்ளிட்ட படங்கள் வருகிற 10 ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மொத்தம் 10 நாட்களுக்கு, 1 நாளைக்கு 5 காட்சிகள் என சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு 5 நாட்களுக்கு மட்டும் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, காலை 9.00 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இறுதிக் காட்சியை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்புக் காட்சி திரையிடலில் முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பான் படம் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில், படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.