![spb charan](http://image.nakkheeran.in/cdn/farfuture/dNiICnnLEA97C6y5bD9rDC7680h7pigIe5bB1PRovks/1598934817/sites/default/files/inline-images/spb-charan.jpg)
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கரோனா தொற்று, பலரையும் பாதித்து வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி. குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சரண். அதில், “ஞாயிற்றுக்கிழமை நான் பதிவு பகிரவில்லை. உங்களிடம் சொல்வதற்கு கணிசமான தகவல்கள் இருக்க வேண்டும் என்பதால் ஒரு நாள் காத்திருந்து இன்று(31/09/20) பதிவிடுகிறேன்.
முதலில், என் அம்மா நலமாக இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாக தேறி வருகிறார். பலர் என் அம்மாவைப் பற்றி விசாரித்ததால் இதை சொல்கிறேன். வீட்டுக்கு திரும்பிவிட்டார், மருந்துகள் சாப்பிட்டு வருகிறார்.
நேற்றும் இன்றும் அப்பாவைப் பார்க்க மருத்துவமனை சென்றிருந்தேன். அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அப்பா ஃபிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப்பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது.
உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார், வீடு திரும்புவார் என்று நான் நம்புகிறேன். மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.