அண்மையில் நடந்த தமிழ் திரையுலக இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழுவில் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இதனை இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் விமர்சித்தார். இதனையடுத்து திடீரென இயக்குநர் பாரதிராஜா ராஜினாமா செய்தார்.
தற்போது தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வருகிற 14ஆம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் வடபழனியில் இயக்குநர் சங்க பொதுக்குழு நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “எப்படி நீங்களாகவே பாரதிராஜாவை தலைவராக தேர்வு செய்யலாம்? அனைத்து உறுப்பினர்களிடம் இது கேட்கப்பட வேண்டுமா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில் கரு.பழனியப்பனின் பேச்சை பாரதிராஜாவின் ஆதரவாளர்கள் எதிர்த்தனர். இதனால் அவ்விடத்தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் பேசிய கரு.பழனியப்பன், “இது என்ன இயக்குநர் சங்க அலுவலகமா இல்லை கேளிக்கை விடுதியா என்று தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்களாக இருக்கிறது” என்று புகார் கூறினார்.
இந்த பொதுக்குழுவில் வேட்புமனு தாக்கல் மற்றும் வாபஸ் குறித்த தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. இயக்குநர் சங்கத்திலும் இரு அணிகளாக தற்போது செயல்பட்டு வருவதாக தெரிகிறது. எஸ்.பி. ஜனநாதனை ஆதரித்து ஒரு அணி இருப்பதாகவும், அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் தலைவர் பதிவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அந்த வேட்புமனுவை நிராகரித்துள்ளார் தேர்தல் அதிகாரி. பாரதிராஜாவை விமர்சித்ததால்தான் எஸ்.பி ஜனநாதனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று எஸ்.பி. ஜனநாதனின் ஆதரவாளர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
இயக்குநர் சங்கத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத்தலைவர்கள், 4 இணைச்செயலாளர்கள், 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.