Skip to main content

தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

the south indian artist association Condemnation

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, "எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பிற்கு வராதது போன்ற பிரச்சனைகள் உள்ளன. அது சம்பந்தமாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி இதை பேசித் தீர்ப்பதாகவும் கூறியுள்ளோம்" என்றார். 

 

மேலும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகியோர் மீது இந்த பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு ரெட் கார்ட் எடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 1ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் இரு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து நிலையில் தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க ஆலோசித்ததாக தகவல் வெளியானது. மேலும் தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட 14 நடிகர், நடிகையர் மீது புகார் எழுந்ததாகவும் அதையொட்டி அவர்கள் மீது ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

 

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் திடீரென தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன.

 

தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை. நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக் கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான், ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதை விடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்