Skip to main content

''நிஜத்தில் நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள்..!'' - நடிகர் சூரி பாராட்டு!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

fhfd

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் தமிழக காவல்துறையினர் இடைவிடாது பணிபுரிந்து வருகிறார்கள். இதனால் காவல்துறையினரில் 75-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தும் அவர்கள் நேரம், காலம் பார்க்காமல் பணி செய்துகொண்டிருப்பதற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் இதுகுறித்து பேசியபோது...


“கரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில், கரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது உயிரைப் பாதுகாக்கும் விதிமுறைகளைத் தினந்தோறும் கூறி மக்களைக் காப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் காவல் துறையினர். தங்களது உயிரையும் பெரிதென்று எண்ணாமல், இரவு பகல் பாராமல், 24 மணி நேரமும் நமது உயிர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழி நடத்திய அவர்களுக்கு கோடி, கோடி நன்றிகள். எங்கள் ஊரில் அய்யனார் சாமி தான் எல்லைச் சாமி. அதுபோல் தற்போது காவல் துறையினர் நாம் எல்லோருக்கும் எல்லைச் சாமி போல் இருந்து நம்மைக் காத்து வருகின்றனர். கடவுளை அன்றாடம் வணங்கும் நாம் அனைவரும், சமீப காலங்களாக காவல் துறையினையறையும் வணங்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் இந்த கரோனாவை காவல் துறை நண்பர்களையும் விட்டு வைக்கவில்லை. 

 

இதுவரை 75க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சினிமாவில்தான் நாங்கள் கதாநாயகர்கள், ஆனால் நிஜத்தில் காவல் துறையினர், மருத்துவர்கள், தீயனைப்பு வீரர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகை நண்பர்கள் ஆகிய நீங்கள் தான் உண்மையான கதாநாயகர்கள். எனவே நிஜ கதாநாயகர்களான இவர்களைச் சந்தித்து நன்றி கூறி, அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாளாக நினைக்கிறேன். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு என்றென்றும் எனது மனதில் நிலைத்திருக்கும். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், நம்மைப் பாதுகாப்பவர்களுக்குத் துணை நிற்போம்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்