காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, தற்போது விடுதலை பாகம் 2, ஏழு கடல் ஏழு மலை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து விலங்கு வெப் சீரிஸை எடுத்த பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதில் ஏழு கடல் ஏழு மலை, மொத்த பணிகளும் நிறைவடைந்த நிலையில் படம் குறித்த ரிலீஸ் அப்டேட் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விடுதலை பாகம் 2, அடுத்த மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் இருந்து முதல் பாடல் ‘தெனந்தெனமும் உன் நெனப்பு’ பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் சூரி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை காண வந்த பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூரி, “விடுதலை 2 அடுத்த மாதம் வருகிறது. முதல் பாகம் போல் இந்த பாகமும் உங்களுக்கு பிடிக்கும். முதல் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீங்க. உலகத்தில் தலை சிறந்த மனிதர்களில் இளையராஜாவும் ஒரு ஆள்.83 வயதில் காலை 4 மணிக்கு எழுந்திருச்சு தொழில் பக்தியோடு பாடல் எழுதி பாடியிருக்கிறார். அவர் இருக்கும் சினிமாவில் நானும் ஒரு நடிகராக இருப்பது மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். இயற்கை அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்து இன்னும் நிறைய இசையை நமக்கு கொடுக்க வேண்டும் என முருகனை வேண்டிக் கொள்கிறேன். அவர் ஒரு புத்தகம் போன்று.
விடுதலை 2-வைத் தொடர்ந்து பிரசாந்த் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன். இதை அடுத்து மீண்டும் எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறனுடைய பங்களிப்புடன் இன்னொரு படம் பண்ணவுள்ளேன். அதன் அறிவிப்பு விரைவில் வரும்.” என்றார். அவரிடம் கங்குவா பட விமர்சனம் குறித்து கேட்ட போது, “ஒரு எளிய ரசிகனாக படம் எனக்கு பிடித்திருந்தது. நெகட்டிவாக நாலு பேர் பேசுகிறார்கள் என்பதற்காக அதை மனதில் எடுத்துக் கொள்ள வேண்டாம். நிறைய பேர் பாசிட்டிவாக சொல்கிறார்கள். தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த எண்ணத்துக்கும் முயற்சிக்கும் தலை வணங்குகிறேன். எந்த தயாரிப்பாளரும் படம் தோற்க வேண்டும் என பணம் போட்டு எடுப்பதில்லை. இப்போதெல்லாம் படம் பார்த்து பேசுவதை விட, கேமரா முன்னாடி நெகட்டிவாக பேசினால் மக்களிடம் ரீச் ஆகிறதென நிறைய பேர் பேசுகிறார்கள். அது அவர்களின் தனிப்பட்ட ஒன்று. ஆனால் படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என பதிலளித்தார்.