ரஜினியுடன் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானது சல்மான் கானுடன் நடித்த தபாங் படத்தில்தான். தற்போது இந்த தபாங் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த பாகத்திலும் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சோனாக்ஷி.
இந்நிலையில் குடியுரிமை திருத்தம் சட்டத்தை இயற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பிரபலங்கள் இடையே ஆதரவும் எதிர்ப்பும் இருக்கின்றன. இந்த போராட்டத்தால் சல்மானின் தபாங் 3 படம் எதிர்பார்த்த ஓபனிங் இல்லாமல், ஓரளவிற்குதான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகின.
இந்த படத்திற்கு முதல் நாள் ரூ. 30 கோடி வரை வாசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கையில் ரூ. 24 கோடி மட்டுமே வசூல் ஈட்டியது. இதற்கு காரணம் வட இந்தியாவில் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டாம்தான் என்று சொல்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா, “நாட்டில் என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும், எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும், நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது” என்றார்.
மேலும் இதுகுறித்து அவரிடம் கேள்வி கேட்டதற்கு பதிலளித்தவர், “நான் இந்த நாட்டு மக்களுடன் இருக்கிறேன். அவர்களது உரிமை குரலை நீங்கள் பறிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.