கனா படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை தயாரித்தார். இது ‘பிளாக் ஷீப்’ கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரியோ ராஜ், ஷெரில், நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு ரசிகர்களிடையே இருந்தது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சமூக கருத்து என்ற ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இந்த படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு வெற்றியை தந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், "இந்தப் படம் ஆரம்பிக்கும்போது சிலர் என்னிடம் வந்து இந்தப் படம் பண்ண வேண்டுமா? யூ-டியூப் டீமை நம்பி இவ்வளவு பணம் போடவேண்டுமா? என்றெல்லாம் கேட்டார்கள். அதன் பிறகுதான் கண்டிப்பாக இந்த டீமுடன் படம் செய்ய வேண்டும் என்று உறுதியாக நம்பினேன். ஏனெனில் என்னை இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், தயாரிப்பாளர்கள், மக்கள் நம்பியிருக்காவிட்டால் நான் இந்த மேடையில் இப்போது நின்று கொண்டிருக்க மாட்டேன். நமக்கு எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது மற்றவர்களுக்கும் நடக்க வேண்டும்.
இந்த வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. படம் முடியும்போது உங்கள் பெயரைப் பார்த்ததும் மக்கள் பலமான கைத்தட்டல் தருவார்கள் என இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதே போல அனைவரும் கைத்தட்டி முடித்ததும் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ கதறி அழுது கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்து ஏர்போர்ட் செல்வதற்கு முன்பாக அவரது பெற்றோர்களைப் பார்த்துவிட்டுச் சென்றேன்.
அவரது அப்பா என் கையைப் பிடித்து அழத் தொடங்கி விட்டார். அப்போதே இந்தப் படம் ஜெயித்துவிட்டது, ஒரு தயாரிப்பாளராக நான் ஜெயித்து விட்டேன் என நினைத்தேன். போட்ட பணம் கிடைத்தது போன்ற சந்தோஷம் இருந்தது" என்று கூறினார்.