Published on 04/06/2019 | Edited on 04/06/2019
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. யூட்யூபில் பிரபலமான 'பிளாக் ஷீப்' சேனலின் டீம் இந்தப் படத்தை உருவாகியுள்ளது. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ, விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தில் பணியாற்றிய நடன இயக்குனர் அஸார் குறித்துப் பேசும்போது ஒரு நினைவைப் பகிர்ந்தார்.
"இந்தப் படத்துல டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்குற அஸார் எனக்கு தேங்க்ஸ் சொன்னார். ஆனா, நான்தான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தோட ஷூட்டிங்... ஊதா கலரு ரிப்பன் பாட்டு எடுத்துக்கிட்டு இருந்தோம். அதுல, 'காலி ஐ ஆம் காலி'னு ஒரு லைன் வரும். அந்த லைனுக்காக நான் தலைகீழா கட்டப்பட்டு தொங்கிக்கிட்டுருந்தேன். அப்போ திடீர்னு கயிறு அறுந்து 12 அடியில் இருந்து நான் விழப்போனேன். விழப் போகும்போது அஸார் வந்து என் தோள்பட்டையை பிடித்து தள்ளிட்டார். அவர் தள்ளுனனால நான் ஷோல்டர்ல லேண்ட் ஆகி விழுந்தேன். ஒரு 10 செகண்ட் என்ன நடந்துச்சுனே தெரியல. ஆனா, அதுக்கப்புறம் எனக்கு ஒன்னும் ஆகல. அவர் மட்டும் என்னைப் பிடிச்சு தள்ளாம இருந்துருந்தா லைஃப் என்னவாகியிருக்கும்னே தெரியல. அதுக்காக நான்தான் அவருக்கு நன்றி சொல்லணும். அதே நேரம் இந்த நன்றிக்காக நான் இந்த வாய்ப்பை தரல. அவரோட திறமைக்காகத்தான் அவருக்கு இந்த வாய்ப்பு."
இவ்வாறு சிவகார்த்திகேயன் நெகிழ்வோடு அந்த நிகழ்வை பகிர்ந்தார்.