சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘பராசக்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் மாலை டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளதால் அதற்கும் ‘பராசக்தி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்திற்கும் தெலுங்கில் ‘பராசக்தி’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் காலையில் அதாவது சிவகார்த்திகேயன் பட அறிவிப்புக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழில் இப்படத்திற்கு சக்தித் திருமகன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு உட்பட மற்ற நான்கு மொழிகளில் ‘பராசக்தி’ தலைப்பை பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் தெலுங்கில் ‘பராசக்தி’ தலைப்பு யாருக்கும் சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் விஜய் ஆண்டனி தெலுங்கில் ‘பராசக்தி’ தலைப்பை கடந்த ஆண்டே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் விஜய் ஆண்டனி தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் பராசக்தி என்ற தலைப்பை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி அதன் சான்றிதழை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து டைட்டில் குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பின்பு ஆகாஷ் பாஸ்கரனும் விஜய் ஆண்டனியின் நேரில் சந்தித்து பரஸ்பரம் செய்துள்ளனர். இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் கலைஞர் குடும்பத்தினர், ஏ.வி.எம்.நிறுவனம், சிவாஜி குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் பராசக்தி படத்தின் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அப்படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞர் வசனத்தில், சிவாஜி கணேசன் அறிமுகமான, 1952 வெளியான திரைப்படம் பராசக்தி. இந்தத் திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்களுடைய தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது.
பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்தத் திரைப்படம் விரைவில் வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில், ‘பராசக்தி’ திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட நாங்கள் திட்டமிட்டு அதற்கான பணியைத் தொடங்கவிருக்கிறோம். இந்தத் தருணத்தில், எங்களுக்கு முழு உரிமையான ‘பராசக்தி’ திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.