தமிழ்நாடு முழுவதும் நேற்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் பொதுத்தேர்வில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கிருஷ்ணகிரியை சேர்ந்த இரு கைகளும் இல்லாத மாணவர் ஒருவர் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்தது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா தனது நான்கு வயதில் வீட்டில் விளையாடிய போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்துள்ளார். மகனின் இந்த நிலையைக் கண்டு கீர்த்தி வர்மாவின் தந்தை வீட்டில் இருந்து சென்று விட, ஆதரவற்ற நிலையில் கஸ்தூரி தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து கஸ்தூரி மகனை படிக்க வைத்து வருகிறார்.
தொடர் தடைகளால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் வேப்பனப்பள்ளி அருகே நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கீர்த்தி வர்மா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வெளிவந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கீர்த்தி வர்மா 500க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து அவர் படித்த பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இரு கைகளை இழந்தும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்து காட்டிய மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கீர்த்தி வர்மாவுக்கு தொலைபேசியில் அழைத்து "சூப்பர்...கலக்கிட்டீங்க..." எனச் சொல்லி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரது மேற்படிப்பிற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார். அந்த மாணவன் தனக்கு மருத்துவராக வேண்டுமென்று ஆசை என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.