கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.