சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகிற நவம்பர் 14ஆம் வெளியாகவிருக்கும் திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலரும், படத்திற்காக பணியாற்றிய சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த், ஒளிப்பதிவாளர் வெற்றி, கலை இயக்குநர் மரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இவர்களோடு சிவகுமார், கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
அந்நிகழ்ச்சியில் சிறுத்தை சிவா பேசுகையில், “கங்குவா படத்தை இரண்டு வருடம் எடுத்தோம். அந்த இரண்டு வருடப் படப்பிடிப்பு நேரத்தில் சூர்யாவுடன் பழகுவதற்கான அற்புதமான வாய்ப்பை இறைவன் எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். இத்தனை அன்பு சூர்யாவுக்கு கிடைக்க என்ன தகுதி இருக்கு என்று யோசித்திருக்கிறேன். அது அவருடன் பழகிய அந்த இரண்டு வருடத்தில் தெளிவாக தெரிந்தது. அந்த அத்தனை அன்புக்கும் தகுதியுடையவர் சூர்யா. அவரை பாராட்டுவதற்கு முன்பு அவரின் அப்பா, அம்மாவை பாராட்ட நினைக்கிறேன். ஏனென்றால் எந்த குறையுமே இல்லாமல் சூர்யாவை வளர்த்திருக்கின்றனர். இதை அவருடன் பழகியபோது நிறைய தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். சூர்யா அர்ப்பணிப்போடு ஒரு விஷயத்தை அணுகும் விதம் 100 சதவிகிதமாக இருக்கும். இந்த படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். நீருக்குள் படமெடுத்த போது அவர் 7 நாட்கள் நீரில் இருந்தார். கடுமையான பனியில் இருந்தார், மலை ஏறினார். இருந்தாலும் உடல் ரீதியாகவும் கதாபாத்திரத்திற்கேற்ப மன ரீதியாகவும் அவர் நடித்து கொடுத்ததற்கு தலை வணங்குகிறேன்.
14 வருடங்களுக்கு முன்பு சிறுத்தை படத்திற்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை சந்தித்தேன். அவர் மூலமாக சிறுத்தை சிவா என்ற அடையாளம் எனக்கு உருவானது. இப்போது கங்குவா படத்திலும் அவருடன் இணைந்திருக்கிறேன். இதற்கு பிறகு கங்குவா படம் என் திரை வாழ்கையில் ஒரு அடித்தளமாக மாறும் என்று நம்புகிறேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கு நன்றி கூற நினைக்கின்றேன். என் அப்பா என்னுடன் இல்லை. அவர் இப்போது இருந்திருந்தால் அவரைவிட யாரும் அதிகமாக சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்கள். என் அம்மா என்னுடைய அனைத்து வெற்றியிலும் என்னுடன் இருந்தார். என் மனைவி இதுபோன்ற நிகழ்ச்சிக்கு வர மாட்டார். சண்டை போட்டுதான் வரவழைத்தேன். ஏனென்றால் இங்கு கிடைக்கும் அன்பை அவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் வரவழைத்தேன். கங்குவா வழக்கமான படம்போல் இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும். அதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்பட போகிறேன் என்று எனக்கு தெரிந்தது. அந்த கஷ்டம் எதுவும் எனக்கு வராத வண்ணம் என் குடும்பத்தை பார்த்துக்கொண்ட என் மனைவிக்கு நன்றி. அவர் சிறந்த பெண்மணி, அவரை கல்யாணம் செய்துகொண்டதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
கங்குவா படம் பார்த்த எல்லோரும் படம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்று கூறினர். இதுவரை நான் கமர்ஷியல் படம் பண்ண இறைவன் அருளை கொடுத்து வந்திருக்கிறார். கங்குவா படம் பண்ண எனக்கு ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசைக்கு ஒரு அடித்தளம் இருக்கும். அந்த அடித்தளம் என்பது என்னுடைய நண்பனாகவும் வழிகாட்டியாகவும் இருக்கக்கூடிய அஜித் குமாரிடம் இருந்துதான் வந்தது. அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எனக்கு தைரியத்தை கொடுத்தது. அஜித் குமார் அடிக்கடி என்னைப் பார்த்து, ‘சிவா உன்னுடைய உயரம் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கும். உனக்கு சினிமாவைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கிறது. எடிட்டராகவும், ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வெற்றி பெற்றிருக்கிறாய் கண்டிப்பாக நீ விதவிதமான ஜானரில் வளர்ந்துகொண்டே போக வேண்டும். நீ சிறகை விரித்து பறக்க வேண்டும். வானம் மொத்தம் உனக்கு தான்’ என்று கூறுவார். அதற்கு முதல் படியாக கங்குவா படம் அமையும் என்று ஆழமாக நம்புகிறேன். இந்த படத்தில் மிக மிக துள்ளலான பிரான்சிஸ் என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்காக அவர் பிடித்த அந்த மீட்டர் அருமையாக இருக்கும்” என்றார்.