Skip to main content

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடருடன் கங்குவா படத்தை ஒப்பிட்ட சிறுத்தை சிவா

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
siruthai siva compares kanguva to game of thrones

சூர்யா நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் பாலிவுட்டில் பிரபலங்களான திஷா பதானி கதாநாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஆகியோரை சந்தித்தோம். அப்போது இருவரும் படம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளனர். சிவா பேசுகையில், “இந்த படத்தில் சூர்யா மற்றும் துணை நடிகர்களின் தோற்றம், உடைக்காக மியூசியம் போன்ற நிறைய இடங்களிலிந்து குறிப்பெடுத்தோம். அதோடு எங்களுடைய கற்பனையை சேர்த்து ஒரு பழங்குடியின உலகத்தை கஷ்டப்பட்டு உருவாக்கினோம். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வெப் தொடரின் படக்குழுவினர் ஆடை வடிவமைப்பிற்காக கடினமாக உழைத்திருப்பார்கள். அந்தளவிற்கு கங்குவா படத்திற்கு உழைப்பை கொடுத்துள்ளோம், அது படம் பார்க்கும்போது தெரியும். இதற்கு முன்பு என் படங்களிலுள்ள திரைக்கதை வடிவமைப்பு இந்த படத்தில் இருக்காது. ஆனால் எமோஷனல் நிறைய இருக்கும். ஏனென்றால் சண்டை காட்சி வருவதற்கு முன்னால், அதை ஈடுகட்டும் அளவிற்கு ஒரு எமோஷனல் காட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் சண்டை காட்சிக்கு மதிப்பு இருக்கும். அந்த எமோஷனல் கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கும்” என்றார். 

அதைத் தொடர்ந்து வெற்றி பழனிசாமி பேசுகையில், “சிவா சொன்ன கதைக்களத்திற்கேற்ப நிறைய ஆராய்ந்தேன். அதில் முன்னுதாரணமாகச் சிறந்த ஒளிப்பதிவிற்காக ஆஸ்கர் விருது வாங்கிய ‘தி ரெவனண்ட்’(The Revenant) படத்தை எடுத்துக் கொண்டேன். அந்த படம் காட்டிற்குள் நடக்கும் கதைதான். அந்த படத்தின் ஒளிப்பதிவை போல் கங்குவா படத்தை உருவாக்க நினைத்தேன். அந்த படத்தில் லைட்டிங் பெரிதாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் வெறும் இயற்கை ஒளியை மட்டுமே பயன்படுத்தியிருந்தார்கள். அதையே கங்குவா படத்திலும் பின்பற்றியிருக்கிறோம். நம்ம ஊரில் எடுக்கும் வரலாற்று படங்களில் பிரமாண்டமான அரண்மனைகள் இருக்கும். போர் காட்சிகளில் இரு பக்கமும் ஆயிரக்கணக்கானோர் இருப்பார்கள். ஆனால் கங்குவா படத்தில் அதுபோல எந்த காட்சிகளும் இருக்காது. கொரில்லா போர்முறைகள் அடிப்படையில் படத்தை உருவாக்கியிருக்கிறோம். அது இந்திய சினிமா ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்” என்று பேசினார்.

சார்ந்த செய்திகள்