சேரன் இயக்கத்தில் வெளியான 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...' என்ற பாடலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கோமகன், கரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தார். கோமகன் பிறப்பிலேயே பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. தன்னால் இவ்வுலகின் ஒளியைக் காண முடியாவிட்டாலும், தன்னைப் போன்றுள்ள பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த உன்னதமான மனிதர்.
நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட கோமகன், இளம் வயதிலேயே பாடும் திறமை மிக்கவராக இருந்தார். சென்னையில் செயல்பட்டுவரும் தேசிய பார்வையற்றோர் சங்கத்தில் பணிபுரிந்து வருகையில், பார்வை குறைபாடு உடையவர்களுக்கு நடைப்பயிற்சி அளிக்கும் அனிதா என்பவருடன் காதல் ஏற்படுகிறது. பல எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்துகொண்ட இத்தம்பதிக்கு, மோனஸ், மோவின் என இரு மகன்கள் உள்ளனர். தன்னைப்போல பார்வைக் குறைபாடு உள்ளவர்களை ஒருங்கிணைத்து, 'கோமகனின் ராகப்ரியா' என்ற இசைக்குழுவை உருவாக்கிய கோமகன், பல்வேறு கச்சேரிகள் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலமாக அந்தக் குழுவில் இருந்தவர்களுக்கு சிறுபொருளாதார வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். விழித்திறன் குறைபாடு கொண்டவர்களின் இசைக்குழு என்ற அனுதாபத்தைத் தாண்டி, உண்மையிலேயே இந்தக்குழுவினர் செய்யும் கச்சேரிகள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன.
அதன் பிறகு, ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க இயக்குநர் சேரன் வாய்ப்பு கொடுத்தார். திரையில் தோன்றியதன் மூலம் இந்தக் குழுவினர் மீது கூடுதல் வெளிச்சம் விழுந்தது. பின், சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையில் அரசு வேலை பார்த்துவந்த கோமகன், வாய்ப்பு அமையும் போதெல்லாம் தன்னுடைய குழுவினரோடு இணைந்து கச்சேரி செய்துவந்தார். இந்த நிலையில், கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இந்த மரணமானது நிகழ்ந்துள்ளது.
இது குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "வார்த்தைகள் இல்லை. மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர். அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர். காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்தச் செய்தி நெஞ்சை நொறுக்கியது. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சேரன் குறிப்பிட்டதுபோல 'கோமகனின் ராகப்ரியா' குழுவில் இருந்த அனைவருக்குமே கோமகன் கண்களாகத்தான் திகழ்ந்துள்ளார்.