காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் தமிழ் நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த சிம்பு காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடக மக்களின் தேவைக்கு போக, மீதமுள்ள தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மேலும் அதோடு நில்லாமல் “யுனைட்டி பார் ஹியுமனிட்டி” என்ற கோஷத்தையும் முன் வைத்து தனது கருத்தை வரவேற்கும் விதமாக கன்னட மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை அங்குள்ள தமிழர்களுக்கு வழங்கி, நாங்கள் என்றும் தமிழக மக்களை ஆதரிப்போம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட சிம்புவின் புதிய முயற்சிக்கு கன்னட மக்கள் மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும், அங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் தண்ணீர் கொடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஒற்றுமையை நிரூபித்தர். இந்த புதிய முயற்சிக்கு பலரும் சிம்புவிற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று சேலம் சென்று அங்கு தூர்வாரப்பட்ட ஏரியை பார்வையிட்டார். அதன்பின் இதுகுறித்து அவர் பேசியபோது....."காவிரி பிரச்சனை குறித்து நான் பேசியதற்கு சிறந்த ஆதரவு இருந்தது. சும்மா பேசிவிட்டு இருந்து விடாமல், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதற்காக பியூஸ் மனுஷிடம் பேசினேன். அவர் நிறைய ஐடியாக்கள் கொடுத்தார். இதைப்பற்றி தெரிந்துக் கொள்வதற்காக சேலம் வந்தேன். நீர் நிலைகள், காடுகள் மற்றும் மலைகள் பாதுகாப்பு குறித்து விரைவில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். நான் அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை" என்றார்.
Published on 19/04/2018 | Edited on 19/04/2018