கெளதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அடுத்ததாக காரைக்குடியில் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் நடக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படப்பிடிப்பில் சில ஆக்ஷன் காட்சிகளை படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் டீஜே, கௌதம் மேனன் மற்றும் கௌதம் கார்த்திக் பங்கேற்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனை உறுதி செய்வது போல் நடிகர் டீஜே தனது சமூக வலைதளப்பக்கத்தில் "பத்து தல, காரைக்குடி" எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.