
ஹனிஃப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியான ‘மர்கோ’. ஷரீஃப் முகமது தயாரித்திருந்த இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். மலையாளத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழுடன் தமிழ், தெலுங்கு உட்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது.
வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கு மேலாக வசூலித்தது. இருப்பினும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே சோனி லிவ் ஓ.டி.டி. தளத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏ சான்றிதழில் இருந்து யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு படத்தின் தயாரிப்பாளர் சென்சார் போர்டு அதிகாரிகளிடம் கோரிகை வைத்துள்ளார். அதை பரிசீலித்த அதிகாரிகள் குடும்பங்கள் பார்ப்பதற்கு இப்படம் உகந்ததல்ல எனக் கூறி கோரிக்கையை நிராகரித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஓ.டி.டி.யிலும் தடை செய்ய வேண்டும் என சென்சார் போர்டு மண்டல அதிகாரி நதீம் துஃபாலி, சென்சார் போர்டு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.