சிம்பு வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினார். அதில் ஒரு படம்தான் கன்னட ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக். மற்றொரு படம் கடந்த வருடமே நடிக்க ஒப்பந்தமான மாநாடு. இதில் கன்னட மஃப்டி ரீமேக் படத்தில் முதல் கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். மாநாடு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியான அறிக்கையில் மாநாடு படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடமே இந்த படத்திற்காக ஒப்பந்தமான சிம்பு, முன்பணத்தை பெற்றுக்கொண்டு நடிக்க வராமல் கால தாமதம் செய்துவந்ததுதான் சிம்புவை படத்திலிருந்து நீக்க காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்த படத்திற்கு நடிக்க கால்ஷீட் கொடுத்த சமயத்தில் திடீரென ஹன்சிகா நடிக்கும் மஹா படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டார் என்று சிம்புவின் மீது புகார் வைக்கப்படுகிறது. இதன்பின்புதான் மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. சிம்புவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு தரப்பிற்கும் நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாநாடு படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார் சிம்பு.

கடந்த வாரம் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சிம்பு. இந்நிலையில் இன்று சிம்பு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வழிப்பட செல்வதற்காக மாலை போட்டுக்கொண்டு விரதம் இருக்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சிம்புவின் இந்த திடீர் மாற்றம் திரையுலகிலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.