அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. கடந்த மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் நாளை (06.10. 2023) வெளியாகிறது.
இதனிடையே கன்னடத்தில் வெளியானபோது, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்த சித்தார்த்துக்கு காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது சர்ச்சையானதைத் தொடர்ந்து கன்னட மக்கள் சார்பாக நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டனர்.
இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா படக்குழு நடத்தியது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த சித்தார்த், கன்னட அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்தார். அவர் பேசுகையில், "கடந்த 28 ஆம் தேதி தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்றைக்கு எந்த ஊரிலும் பந்த் கிடையாது. அதனால் ஒரு இடத்தை காசு கொடுத்து புக் பண்ணி ஒரு தனியார் ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினோம். எதுவுமே புரியாத அளவிற்கு திடீரென்று சில பேர் வந்து... என்ன பன்னாங்கன்னு எல்லாரும் பாத்திருப்பீங்க. இதில் முக்கியமான விஷயம் பத்தி நீங்க தெரிஞ்சிக்கணும், பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. பந்த் அன்றைக்கு என்னுடைய சுயலாபத்துக்காக செய்தேன் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது. அதற்கு அடுத்த நாள் தான் பந்த் அறிவிக்கப்பட்டது.
என் வேலையே நிறுத்த ஒரு சரியான காரணமும் யாரிடமும் கிடையாது. நாங்க எங்க பக்கம் நிஜமாகவே எந்த தப்பும் பண்ணவில்லை. அதன் பிறகு நடந்த விளைவுகள், படத்தை பற்றி யாருமே கேள்வி கேட்காமல் சம்பந்தமில்லாமல் அதை பற்றி கேட்கிறீர்கள். ஒரு வாரத்துக்கு அந்த சம்பவத்தை பற்றி பேசாமல் இருந்ததற்கு இது தான் காரணம். நீங்க இப்போது கேள்வி கேட்டுள்ளீர்கள், அதன் காரணத்தினால் தான் இப்போது பேசுகிறேன். அந்த சம்பவத்துக்கு பிறகு பெரிய மனிதர்கள் பெரிய மனதுடன் மன்னிப்பு கேட்டார்கள். அவுங்க ஊரில் எங்களை அவமதித்தது பிடிக்கவில்லை என சொல்லி எனக்கு ஆதரவு தரும் வகையில் சிவராஜ்குமார் சார், பிரகாஷ் ராஜ் சார் இருவரும் மன்னிப்பு கேட்டனர். அந்த மன்னிப்பை என்னால் ஏத்துக்க முடியாது. ஏனென்றால் எந்த தப்புமே அவர்கள் பண்ணவில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க தேவையே இல்லை. ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டது ஒரு அழகான விஷயம். அவர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. நாங்கள் எல்லாரும் ஒரே நதியில் தான் குளிக்கிறோம். எல்லாமே ஒன்றுதான்.
அதேபோல் அந்த அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னுடைய 20 வருஷத்துல அரசியலை பத்தி நான் பேசுனது கிடையாது. இப்பவும் அதற்கு அவசியமில்லை என கருதுகிறேன். இதையெல்லாம் தாண்டி மீண்டும் எந்த தயாரிப்பாளருக்கும் இது நடக்கக்கூடாது. இதிலிருந்து அரசியலை வெளியில் எடுத்துவிடுங்கள். என்னுடைய படத்திற்கு தான் நான் பிரச்சாரம் பண்ண முடியும். இவ்ளோ பெரிய பிரச்சனை நடக்கும் பொழுது எதுக்கு உன் வேலையை பண்ணுகிறாய் என்று கேட்டால்... ஒரு தயாரிப்பாளராக நான் என்ன பதில் சொல்வது. அதனால் என்னுடைய பொழப்பை மட்டும் தான் என்னால் பார்க்க முடியும். என் வயிற்றில் யாராவது உதைத்தால் அதை தப்பு என்று சொல்ல முடியும்.
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை இந்த விவகாரம் குறித்து என்னிடம் எதுவும் பேசவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் கூட அவர்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அதற்கு சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, அதனால் அதைப் பற்றி பேசத் தேவையில்லை என சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசியிருக்க வேண்டும். இனிமேல் மீண்டும் ஒரு தமிழ் தயாரிப்பாளருக்கு இது நடக்கக் கூடாது. அதனால் அவர்களுக்கு இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
சினிமா துறைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து சினிமா துறையினர் மீது இப்படி நடந்து கொள்ளும் போது... அன்றைக்கு பத்து பேர் தான் பிரச்சனை பண்ணார்கள். கன்னட மக்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. கன்னட திரையுலகத்திற்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு விஷயம், கண்ணு பட்டுவிட்டதா என தெரியவில்லை. அன்றைக்கு அது நடந்தது. அதை வைத்து என்னுடைய படத்துக்கு விளம்பரப் படுத்த மாட்டேன். அது மாதிரி ஆளும் நான் கிடையாது. எனக்கு என்னுடைய படம் தான் முக்கியம்" என்றார்.