கடந்த ஆண்டு... திடீரென ஒரு தெலுங்கு பாடல் தமிழ் இளைஞர்களின் ரிங் டோனாக, காலர் ட்யூனாக, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸாக, இன்னும் என்ன வடிவிலெல்லாம் கொண்டாடப்பட முடியுமோ அப்படியெல்லாம் கொண்டாடப்படுகிறது. காதல் மனம் கொண்ட இளைஞர்களை ஆட்கொள்கிறது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் தராத காதல் பாடல்கள் இல்லை. ஆனாலும் நெடுநாள் கழித்து ஒரு தெலுங்குப் பாடல் தமிழ் திரையிசை ரசிகர்கள் மத்தியில் இப்படி வைரல் ஆகக் காரணம், இனிமையான ப்ளெசண்டான மெட்டு, அது விஜய் தேவரகொண்டா என்ற நடிகரின் பாடல் என்ற கவனம்... இந்த இரண்டு காரணங்களைத் தாண்டி அந்தப் பாடலைப் பாடிய மயக்கும் குரல். ஆம், அந்தப் பாடல் கீதா கோவிந்தம் படத்தின் 'இன்கேம் இன்கேம்', குரல் சித் ஸ்ரீராம் உடையது.
2012ஆம் ஆண்டு, மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் பாடல்கள் வெளியான போது, அந்த ஆல்பத்தில் 'அடியே... என்னை எங்கே நீ' பாடல் வித்தியாசமாக இருந்தது. முதலில் 'என்னடா பாட்டு இது' என்று குழப்பிய இழுவையான மெட்டு, பிசிறடிக்கும் குரல் ஆகியவை மீண்டும் மீண்டும் கேட்கக் கேட்க ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கத்தைப் போலவே உள்ளே இறங்கி கேட்பவரை கிறங்க வைத்தது. இது இசையை நுணுக்கமாக ரசிப்பவர்களுக்கு மட்டுமே. பொதுவான ரசிகர்களுக்கு அந்தப் பொறுமை இல்லாததாலும், படம் வெளியாகி அடைந்த படுதோல்வியாலும் அந்தப் பாடலும் மெல்ல மறைந்தது. மீண்டும் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஐ' படத்தின் 'என்னோடு நீ இருந்தால்' பாடலில் கவனிக்க வைத்தது சித் ஸ்ரீராம் குரல்.
தமிழ் திரைப்பட பாடகர்களில் ஜாம்பவான்களாக விளங்கிய டி.எம்.எஸ்., எஸ்.பி.பி, யேசுதாஸ் போன்றோரின் குரலில் ஒரு ஒழுக்கம் இருக்கும். இசையின், மெட்டின் எல்லைகளுக்குள் படிந்து செல்லும் குரல்கள் அவை. ஆனால், சித் ஸ்ரீராமின் குரல் சற்றே ஒழுக்கமற்று பிசிறடிக்கும் தன்மையுடன் இருந்ததே திரையிசை ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அதற்கு முன்பே 'ராசாத்தி என் உசுரு' பாடிய சாகுல் ஹமீது, 'காதல் பிசாசே' போன்ற பாடல்களைப் பாடிய உதித் நாராயணன் போன்றவர்களின் குரலுக்கும் இந்தத் தன்மை உண்டென்றாலும் அவர்களுக்கு இத்தனை பாட்லகள் பாடும் வாய்ப்பைக் கொடுக்கவில்லை இசையுலகம். சித் ஸ்ரீராமின் குரலுக்கு இருக்கும் வசீகரம் இன்னும் அதிகம் என்பதும் உண்மை.
எஸ்.பி.பி, மனோ, அவர்களுக்குப் பிறகு ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன், கார்த்திக், ஹரிஷ் ராகவேந்திரா வரைக்கும் மட்டுமே பாடலின் குரலை வைத்து பாடகர்களை கண்டு சொல்வது தமிழ் ரசிகர்களுக்கு எளிதாக இருந்தது. கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம் போன்றோர் வேறு ரகம். அதன் பிறகு தமிழ் திரைப்பட இசையுலகில் ஒரு புரட்சியைப் போல புதிய பாடகர்கள் கூட்டமாக இடம் பிடித்தனர். அது நல்ல போக்கா இல்லையா என்பது வேறு விவாதம். ஆனால், ரசிகர்கள் மனதில் பதிந்த குரல் என்ற ஒன்று சில காலத்துக்கு இல்லாமல் இருந்தது என்றே சொல்லலாம். பிறகு நடிகர்கள் பாடும் போக்கும் அதிகரித்தது. படங்களில் பாடல்கள் நிறைய வைப்பது படத்தின் தரத்தைக் குறைக்கும் என்ற எண்ணத்துடன் படமெடுக்கும் இயக்குனர்கள் பெருகினர். கதைக்களங்கள் மாறின. பாடல்களால் பெரும் புகழ், வெற்றி பெற்ற செல்வராகவனே கூட தன் 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆல்பத்தில் மூன்றே மூன்று பாடல்களை (தீம் தவிர்த்து) வைத்தார். இப்படி தமிழ் திரைப்படங்களின் பாடல்களின் நிலை மோசமடைந்த பின் ரசிகர்களின் மனதில் தனி அடையாளத்துடன் இடம் பிடித்த முக்கிய குரல் சித் ஸ்ரீராம் குரல் என்றே சொல்லலாம்.
ஆரம்பத்தில் வருடத்திற்கு ஒன்று இரண்டு என்று பாடிய சித், இந்த ஆண்டில் கிட்டத்தட்ட எல்லா முக்கிய படங்களிலும் ஒரு பாடல் பாடியுள்ளார். 'ஏனோ வானிலை மாறுதே', 'மறுவார்த்தை பேசாதே' இரண்டும், வெளியாகி ஆண்டுகளாகியும் இளைஞர்களின் மனதை, மொபைலை, குரலை ஆக்கிரமித்திருக்கும் பாடல்கள். 'கீதா கோவிந்தம்' படத்திற்கு சித் பாடிய 'இன்கேம் இன்கேம்' பாடல் கொடுத்த மைலேஜ் மிகப்பெரியது. தமிழ் திரைப்பட வரலாற்றில் பாடல்களால் மட்டுமே வெற்றி பெற்ற படங்கள் பல. பழைய மோகன் படங்களிலிருந்து காதலர் தினம், பார்வை ஒன்றே போதுமே, வருஷமெல்லாம் வசந்தம் ஆகியவற்றை உதாரணங்கள் என்று சொல்லலாம். அந்தக் காலகட்டம் தெரியாத 2K கிட்ஸ்சுக்கு ஒரு பாடல் படத்திற்கு எவ்வளவு பெரிய ஓப்பனிங் தர முடியும் என்று காட்டியது 'இன்கேம் இன்கேம்'. அதற்கடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் படங்களில் பெரும்பாலும் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் இதயமாக இருந்தது 'கண்ணான கண்ணே' பாடல். அதில் தாமரையின் வரிகளும் சித் ஸ்ரீராமின் குரலும் ஆற்றியது மிக முக்கிய பங்கு.
இந்த வெற்றிகளுக்குப் பின்பு புதிய, சிறிய படங்களுக்கு பெரிய அறிமுகம் தரும் விஷயமாக சித் ஸ்ரீராமின் குரல் ஆகிவிட்டது. ஒரு காலகட்டத்தில் எல்லா படங்களுக்கும் மணிவண்ணனின் கால்ஷீட் வாங்கிவிடுவார்கள். இன்னொரு காலத்தில் வடிவேல். படம் எப்படியிருந்தாலும் காமெடி கரைசேர்க்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அது பலமுறை நடந்தும் இருக்கிறது. இசைக் கோணத்தில் எடுத்துக்கொண்டால் கொஞ்ச நாளைக்கு முன்பு வரை சிறிய படங்களுக்கு கவனம் ஈர்க்க, சிம்புவை வைத்து ஒரு பாடலை பாடச் செய்வார்கள். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் கவனத்தை எளிதாகப் பெற சில விஷயங்கள் செய்யப்பட்டன. இப்பொழுது சித் ஸ்ரீராமின் குரல் அதற்கு உதவுகிறது. ஆனால், அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு பாடலும் ஏனோ தானோ அல்ல, சூப்பர் டூப்பராகத்தான் இருக்கிறது. 'கட்டப்பாவக் காணோம்' படம் பலருக்கு மறந்தாலும் அதில் இடம்பெற்ற 'ஹே பெண்ணே' பாடல் மறக்காது. இப்படித்தான் சித் பாடிய ஒவ்வொரு பாடலும்.
சென்னை மைலாப்பூரில் பிறந்த சித் ஸ்ரீராம் ஓரிரு வயதிலேயே அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்க்கோவுக்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். நண்பர்களுடன் சேர்ந்து கவர் ஸாங்க்ஸ் உருவாக்கி யூ-ட்யூபில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், ரஹ்மானுக்கு அந்தப் பாடல்களை அனுப்பி வைத்து வாய்ப்பைப் பெற்றவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்கைப்பிலேயே தனது முதல் பாடலைப் பதிவு செய்த இவர் இன்று சென்னைக்கு மீண்டும் குடிவரலாம் என்னும் அளவுக்கு பாடல் வாய்ப்புகள். ஆனால், கவனமாகவே தேர்வு செய்கிறார் சித் ஸ்ரீராம். லேட்டஸ்ட்டாக 'அந்தி மாலை நேரம்... ஆற்றங்கரை ஓரம்...' என்று நம் மனதில் நிலவைக் காய விடுகிறார் சித். அவருக்கு நம் பிறந்த நாள் வாழ்த்துகள்.