ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப்பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அயோத்தியைச் சேர்ந்த 'அனுமன்காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ், பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். மத்தியப்பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பதான் படம் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த பின், பாடல் காட்சிகளில் சில மாற்றங்களைச் செய்ய கேட்டுக்கொண்டுள்ளனர். அதனைச் சரி செய்து மீண்டும் தணிக்கை சான்றிதழுக்கு சமர்ப்பிக்குமாறு படக்குழுவிடம் கூறியுள்ளது.
இது தொடர்பாக திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, "ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளை மக்கள் கண்டறிய தணிக்கைக் குழு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளது. ஏதேனும் பிரச்சனை இருந்தால் சம்மந்தப்பட்ட நபர்களிடம் பேசி தீர்வு காண முடியும் என்பதை நம்புகிறோம். நமது கலாச்சாரமும் நம்பிக்கையும் புகழ் பெற்றது, அதே சமயம் சிக்கலானது மற்றும் நுணுக்கமானது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த வேண்டும்" எனப் பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார்.