
தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசுரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.
இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது ஒரு அறிவுரை கூறியுள்ளார். “நீங்க ஒரு விஷயம் பண்ண போறீங்க. ஒரு லட்சத்தியத்த அடையுறதுக்கு தயாராகிட்டு இருக்கீங்க. அது ரொம்ப நல்லது. ஆனா அதை ஏன் ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிட்டு திரியணும். வரவங்க, போறவங்க, ஃப்ரெண்ட்ஸு... ஏன் எல்லார்டையும் சொல்றீங்க. அப்படி சொன்னா அது விலங்காமலேயே போய்விடும். நீங்க சொல்லி அவங்க சந்தோஷப்படுவீங்கன்னா நினைக்கிறீங்க. இந்த உலகத்துல யாரும் எதுக்காகவும் மத்தவங்களுக்காக சந்தோஷப்படுறதே கிடையாது. அமைதியா இருந்துட்டு வேலை செய்யுங்க. அதே மாதிரி அமைதியா போங்க , வாங்க. நீங்க வேலை செய்யுறது யாருக்குமே தெரியக் கூடாது.
அதே மாதிரி இன்னொரு விஷயம், எதுக்காகவும் யாருக்கிட்டையும் உதவி கேட்றாதீங்க. நீங்க சின்ன உதவி கேட்டு அவங்களும் பண்ணிடுறாங்கன்னு வச்சிப்போம், அதை அவங்க ஆயுசு முழுக்க சொல்லி சொல்லி காட்டுவாங்க. ஒன்றை அணா உதவி பண்ணிட்டு ஆயிரம் கோடிக்கு பேசுவாங்க” என்றுள்ளார்.