இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர்
வெளியிடப்பட்டது.
மேலும், இந்தப் படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றைச் சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலடி தரும் வகையில் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், “தன் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் முழு உரிமையும் நடிகருக்கு உண்டு. ஆனால், சில நேரங்களில் சில இடங்களில் அது சாத்தியப்படாமல் முரண்பாடுகள் உள்ள நாடு இது. இம்ரான்கானாக ஷாருக்கான் நடிக்க முடியுமா? அவ்வளவுதான்.
ஆஸ்பத்திரி, அப்பளம், விமானம், ஐ.பி.எல் பயிற்சியாளர் பணி கருத்து பரப்புமா?. இதற்கும் நடிப்பு சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம்? இது முரண்பாட்டைத் தீர்க்குமா? என் மரியாதைக்குரிய சகோதரி ராதிகா சரத்குமார்...
சகோதரி குஷ்புவுக்கு வணக்கம். முன்னாடி நீங்க மணியம்மையாராக நடிச்சீங்க. இப்ப நடிக்க முடியுமா? சகோதரி நடிப்பு சுதந்திரம் வேற. சமூகப் பரப்பில் ஒரு நடிகருக்கு உண்டாகும் மாற்றம். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என அனைவரும் வந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.