சென்னையில் பருவமழை காரணமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீர் வாரியம் சார்பில் கழிவு நீர் வடிகால் பணிகள், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் என பல்வேறு சேவைத் துறைகள் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையை அடுத்த மாங்காட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அண்மையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதேபோல் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இப்படி தொடர் உயிரிழப்புகள் நடந்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.
இந்நிலையில் சீனு ராமசாமி பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டது தொடர்பாகத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நகரத்தைச் சரிசெய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகைத் தொழிலாளி முடித்திருத்தம் செய்வதுபோல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். ஒட்டுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என விமர்சித்துக் குறிப்பிட்டுள்ளார்.
நகரத்தைச் சரிசெய்து நெறிப்படுத்த வேண்டும்.
அது ஒரு சிகைத் தொழிலாளி
முடித்திருத்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும்.
ஒட்டுமொத்த நகரத்தையே தோண்டிப்போட்டால்
பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்.@chennaicorp— Seenu Ramasamy (@seenuramasamy) November 10, 2022