‘மாமனிதன்’ படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருளானந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. இதில் சீனு ராமசாமி, ஏகன், மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீனு ராமசாமி, “பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை வாழ்த்தியது எனக்கு சிறப்பான நாளாக அமைந்தது. இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கு தமிழ் சினிமாவில் ஆளே இல்லை. என்னுடைய நீர்ப்பறவை, தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை பட வரிசையில் இந்த படமும் இருக்கும். படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் நிறைந்த மனதுடன் இந்த படத்தை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்கள் என்று ஆழமாக நம்புகிறேன்” என்றார்.
அப்போது அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர், “உங்க படத்தில் வரும் கதாபாத்திர குறைகளை சரிசெய்ய எத்தனையோ மறுவாழ்வு மையங்கள் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளை மட்டும் காட்டி வருகிறீர்கள். இந்து மதத்திலும் அதுபோல அமைப்புகள் உள்ளது அதை ஏன் படத்தில் காட்டுவதில்லை” என கேள்வி எழுப்பினார். அதற்கு சீனு ராமசாமி பதிலளிக்கையில், “படத்தின் அந்த காட்சியில் காவி வேட்டி கட்டி நான் உட்கார்ந்திருந்தேன் நீங்கள் பார்க்கவில்லையா. எங்க ஊரில் கிறிஸ்தவ அமைப்புகள் இருக்கிறார்கள்.
நான் கிறிஸ்தவமா, இந்துவா, முஸ்லீமா என்றெல்லாம் பார்க்கவில்லை. நான் சமூக நல்லிணக்கத்தை சொல்லுகிறவன். என் படத்திலும் அதை வலியுறுத்தி வருகிறேன். நான் கடவுளுடைய பிராத்தணையை குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், மதத்தை குறிப்பிட்டது கிடையாது. நான் பிராத்தணைகள் இருப்பதை நம்புகிறவன். என்னுடைய மாமனிதன் படத்திலும் ஒரு இஸ்லாமிய கதாபாத்திரம் வரும். இதுபோலத்தான் தொடர்ந்து சமூக நல்லிணக்கத்தை சொல்லி வருகிறேன்” என்று கூறினார்.