‘சபாஷ்! சரியான போட்டி!’என்று உரக்கச் சொல்லலாம். ‘ஆரோக்கியமான போட்டி! ' என்றும் அகமகிழலாம். ஆம். மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழிக்கு உதவுவதில் நடிகர்கள் கமல்ஹாசனுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே அப்படி ஒரு போட்டா போட்டி! வென்றது யார்? என்று பார்ப்போம்!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த கனிமொழி மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். குடும்ப ஏழ்மை சூழ்நிலை காரணமாக, கூலி வேலை பார்த்தார். ஒருகட்டத்தில், கல்விக்கட்டணம் செலுத்த வழியில்லாமல் போக, ஊடகம் ஒன்றில் இதுகுறித்த செய்தி வெளியானது. உடனே, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கனிமொழி குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். தன் அண்ணன் சாருஹாசன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையானது, மாணவியின் படிப்புச் செலவை ஏற்கும் என்று அறிவித்தார். கமல்ஹாசனின் இந்த மனிதாபிமானம் கண்டு, கனிமொழி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
எதற்காக சிவகார்த்திகேயன் பெயர் இந்த விஷயத்தில் அடிபடுகிறது தெரியுமா? முதலில் மாணவி கனிமொழிக்கு உதவ முன்வந்தது சிவகார்த்திகேயன்தான். செய்தி வெளியிட்ட சேனல் தரப்பை அவரே தொடர்புகொண்டு, தான் உதவி செய்வதாகக் கூறினார். அதன்பிறகு, கமல்ஹாசன் தரப்பும் உதவ முன்வர, ‘அதுவந்து.. ஏற்கனவே, சிவகார்த்திகேயன் உதவுவதாக உத்தரவாதம் தந்துவிட்டார்’ என சேனல் தரப்பு சொன்னது. உடனே லைனில் வந்த கமல்ஹாசன் ‘பரவாயில்ல.. தம்பிகிட்ட (சிவகார்த்திகேயன்) நானே பேசுறேன்’ என்று சொல்லிவிட்டு, சிவகார்த்திகேயனிடம் பேச, ‘அண்ணே! யார் உதவி செய்தால் என்ன? அந்த மாணவி படிப்பைத் தொடர வேண்டும். அவ்வளவுதான்!’ என்று கூலாகப் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். பதிலுக்கு உலகநாயகன் ‘உனக்கு ரொம்பப் பெரிய மனசுடா!’ என்று வாழ்த்த, உதவுவதில் விட்டுக்கொடுத்த சீமராஜாவுக்கு பூரிப்போ பூரிப்பு!
அரசியலுக்கு வந்து யார் நல்லது செய்தாலும் வரவேற்க வேண்டியதுதான்!