இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் நந்தன். இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் அ.வினோத் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சீமான் பேசுகையில், “இன்று நந்தன் இசை வெளியீடு, இறைவனைக் காண இசை பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது. ஆனால் இந்த இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல, மனிதனைக் காண. மனிதனைக் காண்பதற்கு வெளியிடும் இசைதான் இந்த நந்தன். நாம் ரசிப்பதற்கு அல்ல, இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை. இந்த இசையை உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.
ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான். பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன். இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும் இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்த திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான், ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி, அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு, அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரகனி மிக அருமையாக நடித்து இருக்கிறான். படத்தை தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.
மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான், ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூட தவறாக நடிக்கவில்லை, அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர். மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்த திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான் சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.