சசிகுமார் நடிப்பில் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அயோத்தி'. மந்திரமூர்த்தி என்ற இயக்குநர் இப்படத்தை இயக்கியிருந்தார். பெரிதளவு ப்ரோமோஷன் இல்லாமல் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் மூலம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தை ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்த் திரையுலகில் இது மிக முக்கியமான ஒரு படம், ஒரு பதிவு என்று தான் கூறவேண்டும். மனிதம் போற்றும் இக்கதையை எழுதிய படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம். தம்பி சசி தனது இயல்பான நடிப்பில் தான் ஏற்கும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றல் பெற்றவர். இப்படத்தில் மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார். தம்பி சசிகுமாருக்கு இப்படம் ஒரு படிநிலைப் பாய்ச்சலாக இருக்கும். அவரின் திரையுலகப் பயணத்தை வேறு ஒருநிலைக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகின்றேன்.
கதாநாயகியாக நடித்த பிரீத்தி அஸ்ரானி மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இது முதல் படம் போலவே இல்லை. மதம், வேதம், தருமம் இதையெல்லாம் தாண்டியது 'மனிதம்' என்பதைத் தான் இந்த கதை சொல்கிறது. அதை மிகவும் அழுத்தமாக இப்படம் சொல்கிறது. இது பார்வையாளர்களுக்குள்ளும் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரணம், ஒவ்வொரு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது. உரையாடல்களும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. இப்படத்தை எல்லோரும் அவசியம் பார்த்து கொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட படங்களை மக்கள் பார்த்து கொண்டாடவில்லை என்றால், இது போன்ற படைப்புகள் திரைக்கு வருவது அரிதினும் அரிதாகிவிடும்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் படக்குழுவினர் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.