![seeman about ar rahman concert issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/bHX2-0EInBv9BBN-6b3I4xK7JTJv2QElTlrvafcGTeM/1694686803/sites/default/files/inline-images/123_53.jpg)
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில், அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், "ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த குளறுபடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறோம்" என ஒரு வீடியோ வெளியிட்டது. இதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் பேசியிருந்தார்.
இதையடுத்து டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "இவ்விவகாரத்தைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்களையும், அவர்களது செயல்பாடுகளைக் கவனிக்கத் தவறிய அரசுத்துறையைச் சேர்ந்தவர்களையும் விடுத்து, இசை நிகழ்ச்சி நடத்திய சகோதரர் ஏ.ஆர். ரகுமானை ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கச் சொல்லி குற்றப்படுத்துவது சரியானதல்ல. ஏ.ஆர். ரகுமான் மீது ஒருசாரார் வன்மத்தைக் கட்டவிழ்த்து விடுவது கடும் கண்டனத்திற்குரியது. அவரை மதரீதியாகச் சுருக்குவதும், தாக்குவதுமான செயல்பாடுகள் அற்பத்தனமான இழிச்செயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஏ.ஆர் ரஹ்மான் இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்டதனால் தான் இந்த பழி சுமத்தப்படுகிறதே தவிர வேறொன்றும் இல்லை. நான் அவரோடு குறுகிய காலங்கள் தான் பழகியிருக்கேன். எங்க படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். அவ்வளவு நேர்மையாகவும் உண்மையாக இருப்பார். மிக எளிமையான மனிதர்.
ஒரு பெரிய இசைக்கலைஞன் வரும் போது, அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்து பாதையெல்லாம் ஒழுங்குபடுத்தி செஞ்சிருக்க வேண்டியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். உரிய இடம் இருக்கா, பாதுகாப்பு இருக்கா, கழிவறை வசதி இருக்கா என அனைத்தும் கேட்டிருக்க வேண்டியது காவல் துறையினர் மற்றும் நிர்வாகம். இதற்கு ரஹ்மான் என்ன பண்ண முடியும். அவர் மேல ஏன் பழி சொல்லுறீங்க.
அவருடைய இசை நிகழ்ச்சியில் மட்டும் தான் பாலியல் தொல்லையா. பா.ஜ.க-வினர் சட்டசபைக்குள் பாலியல் வீடியோ பார்த்துள்ளார்கள். அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, கொலை என எத்தனை வழக்கு இருக்கு. அதையெல்லாம் நீங்க மறைக்கலையா" என்றார்.