‘அயோத்தி’, ‘கருடன்’, படங்களுக்கு பிறகு சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நந்தன்’. இரா. சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(13.09.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் அ.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சசிகுமார் பேசுகையில், “படத்தை பாராட்டிய சீமானுக்கு நன்றி. வினோத் அவர் படத்தின் புரமோஷனுக்கே வரமாட்டார். ஆனால், சரவணனுக்காக வந்து படத்தை பாராட்டி பேசியுள்ளார். அவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை வினோத் பாராட்ட மாட்டார். ஆனால், பாராட்டி பேசியதில் மிகவும் மகிழ்ச்சி. சரவணனை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய படத்தின் ‘உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு’ என்ற டயலாக்தான் நினைவுக்கு வரும்.
சரவணனை எனக்கு எப்படி பிடிக்குமென்றால் இப்படத்துக்காக குடும்பத்தை விட்டு முதல் ஆளாக வந்து நிற்பார். ஆனால், அவருடன் கடைசி வரை இருக்கப்போவது அவர் மனைவிதான். அவர் மனைவி டீச்சராக இருந்தாலும் வேலையெல்லாம் விட்டுவிட்டு சரவணனுக்காக இங்கு வந்துள்ளார். நான் இந்த படத்தில் வாங்கிய அடியெல்லாம் பின்னாடி விருதாக கூட மாறும். ஆனால், சரவணனுக்காகவும் அவரின் மனைவிக்காகவும் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும்.
நான் இந்த படத்திற்கு வழியனுப்ப போனவன் தான், நான்கு நாள் நடிக்கத்தான் இந்த படத்திற்கு போனேன். சமுத்திரக்கனி நடிக்கும் கதாபாத்திரம்தான் என்னுடைய கதாபாத்திரம். ‘டேய் நான் வழியனுப்ப வந்தவன்டா என்னய ஏத்தீட்டீங்க’ என்பது போல் படப்பிடிப்பு நடந்தது. நான் இந்த படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று தயாரிப்பாளர் சொன்னார். ஆனால், நான் இஷ்டப்பட்டுத்தான் கஷ்டப்பட்டேன். நட்புக்காக உயிரையே தருவோம், அடி வாங்கமாட்டோமா?... இந்த படத்தை எல்லோரும் ரொம்ப ரசித்து பார்க்கப்போகிறீர்கள். ‘நந்தன்’ படம் அல்ல ஒரு பதிவு. இந்த பதிவில் நான் இருப்பது ரொம்பவும் சந்தோஷம். ஜிப்ரான் தனது இசையால் இந்த படத்தை ரொம்ப பிரம்மாண்டமாக மாற்றியுள்ளார்” என்றார்.