இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்தி வீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா, அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தார். இதையடுத்து அதை மறுத்து அமீர் அறிக்கை வெளியிட்டார். அதில், “ஞானவேல் ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். பருத்தி வீரன் திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணாமல் போனவர் அவர்.
அதன் பின்னரே, நான் எனது நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், பருத்தி வீரன் படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்பிரச்சனையில் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது. பருத்தி வீரன் திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து 'படத்தை நீங்களே வெளியிடுங்கள்’ என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டு மூன்று பக்க அறிக்கை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமார் அமீருக்கு ஆதரவாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். பருத்தி வீரன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” எனக் குறிப்பிட்டுள்ளார்.