Skip to main content

படப்பிடிப்பு தளத்தில் விபத்து - கார்த்தி படக்குழு விளக்கம்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
sardar 2 team condolence for stunt man passed away in shooting spot

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்தார்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசை சார்ந்த பணிகளை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொண்டிருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.85 கோடிக்கு மேலாக வசூலித்தது. 

இதற்கிடையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா  இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன், யூகி சேதி உள்ளிட்ட நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று கடந்த 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கியது. 

sardar 2 team condolence for stunt man passed away in shooting spot

சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சண்டை கலைஞர் ஏழுமலை என்பவர் படப்பிடிப்பு தளத்தில் 20அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சாலிகிராமம் அருகே பிரசாத் ஸ்டூடியோவில், சண்டை பயிற்சியின் போது, அவர் தவறி விழுந்த நிலையில் மார்பில் அடிப்பட்டு, நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் திரையுலகிலனர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சர்தார் 2 படக்குழு, சண்டை கலைஞர் ஏழுமலை காலமானதை ஒட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் ரிக் மேனாக பணியாற்றிய ஸ்டண்ட் யூனியனின் உறுப்பினர் ஏழுமலையின் மரணம் குறித்து வருத்தம் தெரிவிக்கிறோம். ஜூலை 16, செவ்வாய்கிழமை மாலை, ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு, அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டிருந்தபோது, ​​ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்தார். அவர் அருகில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில், தீவிர மருத்துவ சிகிச்சையின் போது ஏழுமலை துரதிருஷ்டவசமாக காலமானார். ஏழுமலையின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், இந்தத் துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் துணை நிற்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்