நடிகர் கவுதம் கார்த்திக் நடிகைகள் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. 'ஹரஹர மஹாதேவகி' புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
அப்போது அதில் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் பேசுகையில்.... "இப்படம் முழுக்க முழுக்க அடல்ட் படம். 'A' சான்றிதழ் பெற்று முற்றிலும் இளைஞர்களுக்காக உருவாக்கி இருக்கிறேன்.இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு, கவுதம் கார்த்திக்கிடம் சொன்னேன். ஒரு கட்டத்தில் அவரிடம் என்ன சொன்னேன் என்றே எனக்கு தெரியவில்லை. அவருக்கும் என்ன கேட்டார் என்றே தெரியவில்லை. அப்படியே சூட்டிங் போய் படத்தை எடுத்து முடித்து விட்டோம். கவுதம் கார்த்திக்கு இது போன்ற படங்கள் வருவதில்லை. வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள்தான் அவரைத் தேடி வருகிறது. மேலும் இந்தப் படத்தின் மூலம் பாலியல் வன்கொடுமைகள் குறைக்கும் நோக்கில் 'சொந்த கையில் சொர்க்கம் காணுங்கள்', அதாவது தன் கையே தனக்கு உதவி என்ற மெசேஜை சொல்லி இருக்கிறோம்" என்றார்.
ஒரு பக்கம் படத்தை படுமோசமாக எடுத்துவிட்டு கடைசியில் திடீரென்று ஒரு மெசேஜ் போட்டு மெர்சல் ஆக்குகிறார்கள் என்றால், மறுபக்கம் மெசேஜ் என்பதற்கே அர்த்தமில்லாமல் இப்படியும் செய்கிறார்கள். நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதா அல்லது உண்மையில் இவைதான் தீர்வா என்று தலை சுற்றுகிறது. தமிழ் சினிமாவை மெசேஜ் பைத்தியம் விட்டு விலக வேண்டும்.