சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் சர்வர் சுந்தரம் மற்றும் டகால்டி ஆகிய இரு படங்களும் ஜனவரி 31ஆம் தேதி ஒரு நாளில் ரிலீஸாவதாக இருந்தது. இவ்விரு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு எங்கள் படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்று விளம்பரம் செய்துகொண்டே வந்தனர். இந்நிலையில் இவ்விரு படக்குழுவினரயும் அழைத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சுவார்த்தை நடத்தி, இரு தயாரிப்பாளர்களிடையே சமரசம் செய்து வைத்திருக்கிறார். இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் இரு படக்குழு தயாரிப்பாளர்கள், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “நடிகர் சந்தானத்திற்கு ஒரு வேண்டுகோள். அவருடைய இரண்டு படங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸாகி நல்லப்படியாக ஓடவேண்டும். அவருடைய முந்தைய படம் ஏ1 செம ஹிட்டானது. அவர் நல்ல நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். ஒன்னுமில்லை சந்தானம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்னும் படத்தில் நடித்தார். அந்தப்படம் பாதியிலேயே ஷூட்டிங் நிறுத்தப்பட்டுவிட்டது. அதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், அப்படியாவது கொஞ்சம் நல்லது நடக்கட்டுமா என்பதற்காகதான்.
அந்த தயாரிப்பாளருக்கு தற்போது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சினிமாவை நேசிக்கக்கூடிய நல்ல தயாரிப்பாளர். அவருக்கு சினிமாவைவிட்டால் வேறு எந்த தொழிலும் தெரியாது. அவர் நிமிர்ந்து நில் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவர் யங் மங் சங் என்றொரு படத்தை எடுத்துவிட்டார். அதையும் ரிலீஸ் செய்யமுடியவில்லை. ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்திற்கு வட்டிக்கு வாங்கிதான் சந்தானத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தார். அந்த வட்டியே மூன்று மடங்காகிவிட்டது.
நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்வது சந்தானத்தின் நண்பர்கள் யாராவது இருந்தால் அவரிடம் பேசுங்கள் இதை பற்றி என்பதற்காகதான். அதாவது காசு பணம் எல்லாம் பெரிதல்ல, நாம் ஒவ்வொருவரும் செய்யும் தர்மம்தான் நிலைக்கும். இந்த படத்திற்கு தற்போது எந்த காசும் வாங்கிக்கொள்ளாமல் சந்தானம் நடித்துக்கொடுத்துவிட்டு, படம் ரிலீஸின்போது முழு தொகையையும் வாங்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கண்டிப்பாக படம் ரிலீஸின்போது முழு தொகை கொடுத்துவிட வேண்டும். அப்படியில்லை என்றால் நாங்களே வந்து அதற்காக கேட்போம்.
அவருடைய தந்தை மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை தயாரித்தவர். அப்படிப்பட்ட குடும்பம் இன்று வேதனையில் வாடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஹீரோ சந்தானம்தான் முடித்துக்கொடுக்க வேண்டும். இந்த படத்தின் பிரச்சனை என்ன என்பதை சந்தானம் தம்பி தலையிட்டு விசாரித்து நடித்து முடித்துக்கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அவர் என்னைவிட சின்ன தம்பி என்றாலும் பாதம்தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.