கோலிவுட்டின் தற்போதைய சென்சேஷன் 'வாத்தி' படத்தின் நாயகி சம்யுக்தா. இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜாவையே காதலில் விழ வைத்தவர். தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு மலையாள வரவு. வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாத்தி' படத்தில் பணிபுரிந்தது குறித்து நமது நக்கீரன் வாசகர்களுக்காக மனம் திறக்கிறார் சம்யுக்தா...
மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என்று பழமொழிகளில் நடித்துள்ளீர்கள். ஒவ்வொரு மாநிலமும் எப்படிப்பட்ட அனுபவத்தை உங்களுக்குக் கொடுத்தது?
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சிறப்புண்டு. குறிப்பாக சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தது தமிழும், கடலும். மெரினா பீச்சுக்கு அதிகம் சென்றிருக்கிறேன். 2018 கேரள வெள்ளத்தின் போது நான் சென்னையில் தங்கியிருந்தேன். அப்போது வெள்ள பாதிப்புக்காக நிவாரண நிதி பெற ஒரு முயற்சியை மேற்கொண்டேன். அப்போது சென்னை மக்கள் செய்த உதவிகளை மறக்கவே முடியாது. அப்போது தொடங்கிய பொதுசேவையை இப்போது வரை தொடர்ந்து வருகிறேன். தமிழ்நாட்டின் காலை உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுரை, சிதம்பரம், தனுஷ்கோடி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், காரைக்குடி என்று பல இடங்கள் பிடிக்கும். குறிப்பாக சிதம்பரம் கோவிலில் எனக்கு கிடைத்தது மறக்க முடியாத ஒரு அனுபவம்.
வாத்தி படம் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. படம் குறித்த உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன?
நான் ரொம்ப மகிழ்ச்சியில் இருக்கிறேன். தமிழ்நாட்டு ஊடகங்கள் அணுகும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதைப்போல இசை வெளியீட்டு விழா அனுபவமும் எனக்கு புதிதாக இருந்தது. தெலுங்கில் பவன்கல்யாணோடு நடித்த போது அவரோடு நடித்த காரணத்திற்காகவே அவருடைய ரசிகர்களின் அன்பு கிடைத்தது. இங்கு 'வா வாத்தி' பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் ரசிகர்களின் அன்பும் ஆரவாரமும் கிடைத்தது. இசை வெளியீட்டு விழாவில் என் பெயர் சொல்லி பாரதிராஜா உள்ளிட்டவர்கள் பேசியது நெகிழ்ச்சியாக இருந்தது.
வாத்தி படம் பற்றி ஒரு நினைவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றால் அது என்னவாக இருக்கும்?
ஒட்டு மொத்த படமுமே எனக்கு மகிழ்ச்சியான நினைவு தான். இது போன்ற ஒரு முழுமையான கேரக்டர் இதுவரை நான் செய்ததில்லை. இது புதிதாக இருந்தது. கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. அழகாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவது எப்படி என்பது பற்றி அறிந்துகொண்டே இருந்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் உருவானதால் வசனங்களை உள்வாங்கிப் பேசினேன்.
தமிழ் மற்றும் தெலுங்கு வசனங்களை உள்வாங்கி உணர்வுகளை வெளிப்படுத்துவது சவாலாக இருந்ததா?
தனுஷ் சார் ஒரு சிறந்த நடிகர். உணர்வுகளை சரியாக திரையில் வெளிப்படுத்தக் கூடியவர். அப்படி ஒருவரோடு சேர்ந்து நடிக்கும்போது இயல்பாகவே நமக்கும் அது வந்துவிடும். கலாச்சாரம், கல்வி முறை என்று இரண்டு மாநிலங்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தையும் மிகச்சரியாக இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார்கள். அதனால் சவால்களோடு சேர்ந்து நிறைவும் இருந்தது.