தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர், விஜய், சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், நானி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக சமந்தா தொடங்கிய திரையுலகப் பயணம் குறுகிய காலத்தில் பேன் இந்திய அளவில் வளர்ந்துள்ளார்.
இதனிடையே, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா நடிப்பில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன் பின்னர், வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்விலிருந்த சமந்தா கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘சிட்டாடெல்’-இன் இந்தியன் ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறினார்.
தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்து வருகிறார். மேலும் அதில் அவர், சிகிச்சை மற்றும் மருத்துவம் பற்றி குறிப்பு வழங்கி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர் ஒருவர், உடல்நலம் மற்றும் அறிவியல் தொடர்பாக சமந்தா படிக்கவில்லை எனவும், அவர் சொல்லும் சிகிச்சைகள் தவறானவை என்று கூறி இதற்காக அவரை சிறையில் தள்ள வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இவரது பதிவு சர்ச்சையானது.
இதையடுத்து, அவருக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக, நான் பல வகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி பல மருந்துகளை நான் சாப்பிட்டேன். இந்த சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. என்னால் அதை வாங்க முடிகிறது என்று என்னை நானே நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன். அதே சமயம் அதனை வாங்க முடியாதவர்களை நினைத்துக் கொண்டிருப்பேன். நீண்ட காலமாக, வழக்கமான சிகிச்சைகள் என்னை குணப்படுத்தவில்லை. பல சோதனைகளுக்குப் பிறகு, எனக்கு அற்புதமாக வேலை செய்யும் சிகிச்சைகள் கிடைத்தன.
25 ஆண்டுகளாக டிஆர்டிஓவில் பணியாற்றிய எம்.டி.யாக இருக்கும் உயர் தகுதி வாய்ந்த மருத்துவர் எனக்கு இந்த சிகிச்சையை பரிந்துரைத்தார். அதை தான் மற்றவர்களுக்கும் கூறி வருகிறேன். ஆனால், ஒரு ஜெண்டில்மேன் எனது பதவியையும் எனது நோக்கத்தையும் தாக்கி பேசியுள்ளார். அந்த ஜெண்டில்மேன் மருத்துவர் என்று நினைக்கிறேன். என்னை விட அவருக்கு அதிகம் தெரியும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், என்னை சிறையில் தள்ள வேண்டும் என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி என்னை விமர்சித்துள்ளார்.
ஒரு பிரபலம் என்பதால் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். என்னைப் பின்தொடர்வதை விட, எனது பதிவில் நான் குறிப்பிட்ட எனது மருத்துவரை அவர் பணிவாக அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு பரிந்துரைத்த மருத்துவரை அவரிடம் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.