
1998ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், சயிஃப் அலி கான், தபு, சோனாலி பிந்த்ரே மற்றும் நீலம் ஆகியோர் இரண்டு கருப்பு பக் வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடைசியாக மார்ச் 28ஆம் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஏப்ரல் 5ஆம் தேதி சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் நீலம், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் உள்ளூர்வாசியான துஷ்யந்த் சிங் ஆகிய அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சல்மான்கான் உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு ஜாமீன் கேட்டு அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமர்வு நீதிமன்றம், ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றும் உத்தரவை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் ஏற்கனவே இதே வழக்கிற்காக 1998, 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் 18 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.