
பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரதீக் பாப்பர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்களுக்கு பிரிதம் சக்ரவர்த்தி இசையமைத்திருக்கப் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் கவனித்துள்ளார். படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு நாளை(30.03.2025) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.
அந்த வகையில் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான் கான், பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் போதிய வரவேற்பு பெறாதது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய படங்கள் தென்னிந்தியாவில் வெளியாகும் போது சரியான வரவேற்புகள் கிடைப்பதில்லை. ஏனென்றால் அங்கு அந்தந்த மொழி நடிகர்களின் ரசிகர்கள் வலுவாக இருக்கிறார்கள்.
நான் அங்கு தெருவில் நடந்து போனால் ‘பாய் பாய்’ என்று அழைப்பார்கள். ஆனால் என் படம் வெளியாகும் போது திரையரங்கிற்குச் சென்று பார்க்க மாட்டார்கள். நாங்கள் தென்னிந்திய நடிகர்களை இங்கு ஏற்றுக் கொண்டது போல் அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா அல்லது ராம் சரண் போன்றவர்களின் படங்களை நாங்கள் சென்று பார்ப்பதால் அப்படங்கள் இங்கு நன்றாக ஓடுகின்றன. ஆனால் அவரது ரசிகர்கள் எங்கள் படத்தை சென்று பார்ப்பதில்லை” என்றார்.