நடிகை ஷாக்சி அகர்வால் தனது திரைத்துறை அனுபவங்கள் பற்றி நக்கீரன் ஸ்டுடியோ யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியிலிருந்து, "சினிமா பற்றி நான் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்லுவேன். திரைத்துறையை பொறுத்தவரை அது பெரிய கடல் போன்றது. அதில் நான் ஒரு சிறிய துளி தான். நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிறைய பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பயணத்தில் ஒவ்வொரு நாளும் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதனை நம்முடைய தலைக்கு ஏற்றாமல் பயணிக்க வேண்டும்.
கெஸ்ட் 2 படம் என்பது அனிமல் த்ரில்லர் படம். கொரோனா தீவிரமாக இருந்தபோது 45 நாட்கள் கொடைக்கானலில் படப்பிடிப்பு இருந்தது. கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு இருந்தது. கொடைக்கானல் படப்பிடிப்பு என்பது அசவுகரியமாக தான் இருந்தது. கேரவன் எல்லாம் ரோட்டில் தான் இருக்கும் ஆனால் படப்பிடிப்பு எல்லாம் காட்டுக்கு நடுவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அந்த சூழலில் தான் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் குளிராக இருக்கும். படப்பிடிப்பின் போது இது தான் சீன் என்று சொன்னார்கள். டயலாக் எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு போனால் நேச்சுரலாக இருக்காது என்பதால் ஆன் ஸ்பாட்டில் தான் டயலாக் சொல்லுவார்கள். ஒரு ஷாட் ஒரே டேக்கில் எடுத்ததை மொத்த படக்குழுவும் ரசித்த அந்த நிகழ்வை நான் மறக்க முடியாது.
ராஜா ராணி படத்திலிருந்து தற்போது வரைக்கும் உள்ள இந்த கற்றல் அனுபவத்தை ரெண்டு வார்த்தையில் சொல்ல முடியாது. அது ஆறு வருட அனுபவம். ஒரே ஒரு விஷயம் நம்முடைய அர்ப்பணிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் ரொம்ப முக்கியம். இந்த விஷயங்களை மட்டும் நாம் ஃபாலோ செய்தால் போதும். சில பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால் நடிகர்கள், நடிகைகள் இப்படி இருப்பார்கள் அப்படி இருப்பார்கள் என்று. திரைத்துறைக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும் யாருக்கு எப்போது அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று." எனத் தெரிவித்தார்.