இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து டெல்லி போலீசார் பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் உள்பட திரைப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த விவகாரம் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது நாட்டில் நிறைய விஷயங்களுக்கு நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக பெண்கள் அதிகாரத்துக்கு வருதல்; பாலியல் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் என சொல்லலாம். அதனால் பாசிட்டிவாக யோசிப்போம். சிறந்த நாட்டை உருவாக்க ஒன்றாக உழைத்திடுவோம்" என்றார்.