இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் கரு படத்தை முடித்த கையோடு ப்ரேமம் புகழ் நடிகை சாய்பல்லவி தற்போது சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்திலும் தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து மிஸ்கின் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் தனது டாக்டர் தொழிலை பற்றியும், சினிமா அனுபவம் குறித்தும் பேசுகையில்.... "சிறுவயதிலேயே நடனம் கற்றுக்கொண்டேன். முதன் முதலில் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்தேன். பின் கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மின் தோழியாக வந்தேன். அதன் பிறகு எனது தந்தை சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் ஆறு ஆண்டுகள் மட்டுமே நிலைத்து இருக்க முடியும். அதன் பிறகு ஓரம் கட்டிவிடுவார்கள் என்றார்.பிறகு படிப்புதான் முக்கியம் என்று சொல்லி ஜார்ஜியாவுக்கு டாக்டருக்கு படிக்க அனுப்பி விட்டார். அங்கு படித்துக் கொண்டு இருந்தபோது தான் ‘பிரேமம்’ பட வாய்ப்பு வந்தது. படிப்புக்கு பாதிப்பு வராமல் விடுமுறையில் மட்டும் நடிக்கும்படி பெற்றோர்கள் தெரிவித்தனர். அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனால் முழு நேர நடிகையாகி விட்டதால் டாக்டர் வேலையை விட்டு விட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால் எனது பெயருக்கு பின்னால் கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை" என்றார்.
Published on 26/03/2018 | Edited on 27/03/2018